எறும்பு ஒன்று கனத்து பெருத்து
என்னை துரத்தி வந்ததாக
கண்ட கனவை
ஒரு வித பயத்தோடு
அம்மாவிடம் கூறினேன்..
வாஞ்சையோடு அழைத்தவள் இருகரம்
அணைத்து உறங்க வைத்து கொண்டாள்..
தொடர்ந்து துரத்தி வந்த
அந்த உருவத்தோடு இப்போது
சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்
அம்மாவின் அரவணைப்போடு...

- நவீன்.

வெக்கை நிறைந்த இப்பாலை நிலத்தின் கானல் நீரில் குளித்துக் கொண்டிருக்கிறேன்.பேனாவின் இடையேயான பிசுபிசுப்பு மையுனுள் இறங்க, அதிகரித்து கொண்டே இருக்கிறது என் அம்மாவினுடேயான இடைவெளிப்போல்.
இந்த இடைவெளி எதனால் விழைந்தது என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.அம்மா உடன் சகஜமாக சிரித்து பேசும் அறை நண்பனை காணும்போதெல்லாம் குற்ற உணர்வு மேலிட தொலைபேசியில் அழைக்கிறேன்.

நல்லா இருக்கியாம்மா?
ம்ம்...நல்லா இருக்கேன்பா.
நீ நல்லா இருக்கியா?
ம்ம்..நல்லா இருக்கேன்.
உடம்பு எப்படி இருக்கு?
பரவாயில்லப்பா..
சரிப்பா உடம்ப பார்த்துக்க.
வச்சிருப்பா.நேரம் கெடச்சா போன் பண்ணு.

சாப்டியாம்மா? என்று கேட்பதற்குள் முற்று பெற்று விடுகிறது உரையாடல்.
இதற்கு மேல் கேட்பதற்கோ,சொல்வதற்கோ ஏதும் இன்றி வெற்றிடம் வந்து நிரப்பி கொள்கிறது.

"என்ன சுகிம்மா இன்னுமா பால் குடிக்கிறான் உங்க பையன்?நாலு வயசாகுது.இன்னும் என்ன?சீக்கிரம் நிறுத்துங்க"
நினைவலைகள் முற்றம் பார்க்க துவங்குகின்றன.ஒருவேளை பால் குடிப்பதை நிறுத்திய உடனே எனதான இடைவெளி தொடங்கி விட்டதோ என்னவோ?

வங்கியில் பணம் எடுக்கும் பொருட்டு அரக்கோணம் வரை செல்ல நேருகையில் என் அக்காவின் பராமரிப்பில் விட்டுச் செல்வாள்.அவ்வாறு செல்கையில் அடுத்த ஊரில் இருந்த எனது தாத்தாவின் வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம்.அப்படியோர் பிரிவு நாளில் யாருமற்ற இருண்ட சாலையில் சூனியத்தின் வெளிச்சத்தில் கண்களில் நீர் வழிய,அவ்வூரை அடைந்து அவள் அறிந்தால் அடிப்பாள் என்றெண்ணி ஓர் கட்டிடத்தின் பின் ஒளிந்து அவளை பார்த்து அழுது கொண்டு இருந்தேன். பிரிவு நாட்களில் பாடப்புத்தகங்களும்,விடுமுறை நாட்களில் என் வீடு ஆட்டுக்குட்டிக்களுமே ஆறுதலாய் இருந்தன.
சொல்லிச் சென்ற நாட்களுக்குள் வர இயலாது போகும்போது, ஒவ்வொரு பேருந்து வருகையின் போதும் ஆவலோடு சென்றுப்பார்ப்பேன்.அவள் வராதது கண்டு புழுதி கண்ணை மறைக்க அழுகை பீறிட்டு எழும்.

ஓரிரு நாட்கள் கழித்து பை நிறைய தின்பண்டகளுடன் வருவாள்.அவளின் வருகை அத்தின்பண்டங்களை விட இனிப்பானதாக இருக்கும். மகிழ்ச்சியில் ஓடிச்சென்று அவள் கால்களைக் கட்டிக் கொள்வேன்.பொங்கி வரும் கண்ணீரோடு ஆரத்தழுவியபடியே வீட்டுக்கு அழைத்து வந்து தின்பண்டங்களை பகிர்ந்து அளிப்பாள்.என் அக்காவிற்கு தெரியாமல் ஒரு துண்டு கூடுதலாய் எனக்கு கிடைக்கும்.

ஒரு சில ஆண்டுகளுக்குள் அவள் கால்களை கட்டிக் கொண்ட என் கைகள் பின் அவள் கைகளை கட்டிக் கொண்டன.இன்று அவளுடன் நடந்து செல்கையில் இரண்டு அடிகள் இடைவெளி கூடவே வருகிறது.கடைசியாய் அவளின் கை பிடித்து நடந்த நாட்களின் நினைவு கூட மனதிலிருந்து அகன்று விட்டிருக்கிறது.

இந்த வார இறுதியிலும் அவளைத் தொலைபேசியில் அழைக்கக் கூடும்.அதே நல விசாரிப்புகளுடன் அந்த அழைப்பும் முடிந்துவிடக்கூடும்.

இனிவரும் அழைப்புகளும்!

6 Comments:

 1. புலவன் புலிகேசி said...
  உங்கள் பாசத்திற்கு முதலில் சல்யூட்..அனைவரும் சந்தித்த சிந்திக்க மறந்த இடைவெளி இது...Word Verification எடுத்து விடுங்க
  aazhimazhai said...
  பிரிவின் 100 சதவீத பிரதிபலிப்பு உங்க வார்த்தைகளில் !!!!
  சி. கருணாகரசு said...
  நினைவு பெட்டகம் மிக அருமைங்க.
  பூங்குன்றன்.வே said...
  நல்லா இருக்குங்க.
  சுசி said...
  ரொம்ப நல்லா இருக்கு..

  அடுத்த தடவ பேசும்போது முன்னாடியே சொல்லி வைங்க எனக்கு நேரம் இருக்கும்மா நீங்க பேசுங்கன்னு..

  என் அம்மா மாதிரியே அவங்களும் உங்க நேரத்த வீணாக்க கூடாதுன்னு நினைக்கலாம்.
  இளவட்டம் said...
  நன்றி நண்பன் புலிகேசி.எடுத்துவிட்டாச்சி.

  நன்றி ஆழிமழை! தொடர் வாசிப்பிற்கும்.

  நன்றி கருணாகரசு சார்.

  நன்றி பூங்குன்றன்.

  நன்றி சுசி.நீங்க சொல்றதும் வாஸ்தவம்தான்.

Post a CommentNewer Post Older Post Home

Blogger Template by Blogcrowds